சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!...
கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலை யாத்திரைக்கான மண்டல கால விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்குவார்கள். பொன்னம்பல மேட்டில் குடிகொண்டுள்ள ஐய்யப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் நீராடி மனதையும் உடலையும் தூய்மையாக்கி மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள். இப்படி விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சில உள்ளன.
மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்:
1.சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். மாலை அணிவதுற்கு நாள், நேரம் பார்க்க வேண்டியதில்லை. எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
2.மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.
3.மாலையிடும் முன்னர் குலதெய்வம் / இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு மாலை அணியும் மந்திரத்தை கூறி தாயை வணங்கி அவர் கையால் மாலை அணிந்து கொள்ளலாம். இல்லையெனில் குருசுவாமி கையால் மாலை அணிந்து கொள்ளலாம்.
4.இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
5.காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.
6.கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்..
7.பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
8.விரத காலம் முழுமையும் ஒரு வேளை அளவோடு சைவ உணவருந்தி, இரவில் பால், பழம் போன்ற ஆகாரங்களை உட்கொண்டு உபவாசம் இருத்தல் வேண்டும்.
9.மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
10.ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
11.இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கத்தில் பங்கேற்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களும் மலைக்குச் சென்று திரும்பும் வரை துக்கம் கேட்கக் கூடாது.
12.ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
13.விரத காலங்களில் மது, புகையிலை, சிகரெட் போன்ற பொருட்கள் லாகிரி வஸ்துகளை பயன் படுத்தக்கூடாது.
14.காலணிகள் பயன்படுத்தக்கூடாது.
15.கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.
16.எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.
17.மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.
18.நாற்பத்தெட்டு நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே போற்றத்தக்க உத்தமமான செயலாகும். விரதமிருந்து ஐய்யப்பனை காண செல்லும் பக்தர்கள் பெருவழி எனப்படும் ஐந்து மலைகளையும்(48 மைல்) நடைப்பயணமாக நடப்பது நல்லது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணத்தால் இப்போது கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மலைக்கு சென்று தரிசனம் முடித்து திரும்பும் வரை கைப்பேசி பயன்பாட்டை தவிர்க்கவும். அவசர தேவைக்கு மட்டுமே கைப்பேசியை பயன்படுத்தலாம்.
19.பதினெட்டு ஆண்டுகள் சபரிமலை செல்லக்கூடிய ஐய்யப்ப பக்தர்கள் தென்னங்கன்று எடுத்துச் செல்வதை (ஒரு சாஸ்த்திர சம்பிரதாயம்) வழக்கமாக கொண்டுள்ளனர். பசுமை சபரிமலையை உருவாக்குவது ஐய்யப்ப பக்தர்களின் இலட்சியம். எனவே, 18ம் ஆண்டு சபரிமலை செல்லக்கூடிய ஐய்யப்பமார்கள் இரு தென்னங்கன்றுகள் வாங்கி அதனை பூஜை செய்து ஒன்றினை சபரிமலைக்கும், மற்றொன்றை சபரிமலைக்கு செல்லக்கூடிய நாளில் அந்த ஐய்யப்பமார்கள் வீட்டிலோ அல்லது அவர்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயத்திலோ நட்டு வைத்து அதனை அவர்களது குடும்பத்தினர் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்கலாம். இதனால் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என கருதப்படுகிறது.
20.தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும் தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்வதும் வேண்டாம்.
21.ஒருமுறை உபயோகித்த இருமுடிப்பை / போர்வை போன்றவைகளை மறுமுறை உபயோகிக்கலாம், அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இருமுடிப்பையை அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.
22.மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதனை அவசியம் தவிர்க்க வேண்டும்.
23.சபரிமலை யாத்திரையின் போது கன்னி சாமிகள் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று.
24.சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும். சபரிமலை யாத்திரையின் போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லாவிதத்திலும் நல்லது.
25.இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.
26.சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.
27.பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து நீராட வேண்டும்.
28.யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.
29.யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.
30.சபரிமலை யாத்திரை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த பிறகே மாலையைக் கழற்ற வேண்டும். பம்பையிலோ நடுவழியிலோ மாலையைக் கழற்றக் கூடாது.
31.ஐய்யப்பன் வழிபாட்டை ஆவேசத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல் அமைதியாகவும், சாத்வீகமாகவும் இந்த விரதத்தை ஆண்டுதோறும் நாம் கடைபிடித்தால் ஓய்வில்லாமல் வாழும் நமக்கு ஓய்வு, மன அமைதி, ஆத்மபலம், நற்சிந்தனை ஆகியவை கிடைக்கின்றன.
--- பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் ஆலயம்
